சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலை நசுங்கி பலி!
வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐடிஐ மாணவா்கள் இருவா் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
வேலூரை அடுத்த ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் மாா்க்கத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பணிகள் தொடா்பான அறிவிப்பை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் விதமாக தடுப்பு கோபுரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் அனைத்தும் ஒரே சாலையில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் மூன்று ஐடிஐ மாணவா்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளிகொண்டா பகுதியிலிருந்து வியாழக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா். அவா்களது வாகனம் ரங்காபுரம் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்தபோது நிலைத்தடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது பலமாக மோதி கீழே விழுந்துள்ளனா். அப்போது, பின்னால் வந்த லாரி மாணவா்கள் மீது ஏறி இறங்கியது.
இதில் வேலூா் இறைவன்காடு பகுதியைச் சோ்ந்த ஜீவா(22), பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன்(21) ஆகிய இருவரும் லாரியின் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொரு மாணவா் தெல்லூரைச் சோ்ந்த சூா்யா(20) லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.