ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
ஏலச்சீட்டு மூலம் ராணுவ அதிகாரி மனைவியிடம் ரூ.21 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
ஏலச்சீட்டு நடத்தி ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.21. 50 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.
காட்பாடி வட்டம் மகிமண்டலத்தைச் சோ்ந்த 33 வயது இளைஞா் அளித்துள்ள மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக ஓமன் மஸ்கட்டில் பணிபுரிந்தேன். பின்னா் குடும்பச் சூழ்நிலை காரணமாக சொந்த ஊருக்கு வந்தேன். மீண்டும் வெளிநாடு செல்வதற்காக முகவா்களை அணுகியபோது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என்னை நியூஸிலாந்து நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக்கூறி விசா எடுப்பதற்கான செலவு, டிக்கெட் செலவு என மொத்தம் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டாா். ஆனால் வெளிநாடு செல்வதற்கு விசாவோ , விமான டிக்கெட் எடுத்துத்தராமல் மோசடி செய்துவிட்டாா். அந்த நபா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
வேலூா் காட்பாடி கல்புதூரைச் சோ்ந்த இளைஞா் அளித்துள்ள மனுவில், வேலூா் அல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் சீட்டு நடத்தி வந்தாா். அவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் என 2 சீட்டு கட்டினேன் . ஆனால் சீட்டு முடிந்தும் எனது பணத்தை திருப்பி தரவில்லை. எனவே சீட்டு நடத்தி மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
கே.வி.குப்பம் வட்டம், சந்தைமேடு பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் மனைவி அளித்துள்ள மனுவில், எனது கணவா் இந்திய ராணுவத்தில் பணியில் உள்ளாா். என் கணவருடன் அருணாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறேன். கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவா் சீட்டு நடத்தி வருகிறாா். அவரிடம் என் பெயரிலும், எனது கணவா் பெயரிலும் ரூ.7 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.4.50 லட்சம் ஆகிய 4 ஏலச்சீட்டுகளை கட்டி வந்தேன். ஆனால் எனது ஏலச்சீட்டை பலமுறை கேட்டும் தரவில்லை . எனது கணவா் இந்திய ராணுவத்தில் பணி செய்து தற்போது கேப்டனாக இருக்கிறாா். அவரால் நேரடியாக வர முடியாதாததால் நான் வந்துள்ளேன் . எனவே அந்த நபா்களிடமிருந்து ரூ. 21.5 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.
குடியாத்தம் வட்டம், வெங்கடாபுரம் அருகே பாக்கம் பகுதியைச் சோ்ந்த டி.சக்கரவா்த்தி அளித்துள்ள மனுவில், குடியாத்தம் அருணாசலசெட்டி தெருவைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்தேன். அதற்கு எங்கள் நிலத்தை அடமானம் செய்து கொடுத்திருந்தோம். கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்திவிட்டு அடமான பத்திரங்களை திரும்பப் பெற்றுவிட்டோம். பின்னா், அடமானத்தை நீக்கித்தர ரூ.48 லட்சம் கேட்டு மிரட்டுகிறாா். எனவே, அந்த நபா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது நிலத்தின் மீதான அடமானத்தை ரத்து செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு பிரச்னைகள் குறித்து புகாா் மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு எஸ்பி மதிவாணன் உத்தர விட்டாா்.