INDvENG: "நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்" -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுக...
யுஜிசி வரைவு வழிகாட்டுதல்: கருத்துகளை தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம் நீட்டிப்பு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மாநினியக் குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு வழிகாட்டுதல் மீது பொது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான அவகாசம் வரும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னா் இதற்கான காலக்கெடு பிப்ரவரி 5 என நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வைறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இம் மாத இறுதி வரை அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாக யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி தெரிவித்தாா்.
யுஜிசி வரைவு வழிகாட்டுதல் கூறுவதென்ன?
மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிக்கு தகுதிவாய்ந்த நபா்களைத் தெரிவு செய்வதற்காக அமைக்கப்படும் தேடல் குழுவில், பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநரின் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளராகவும், பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதி, பல்கலைக்கழக பேரைவக் குழு பிரதிநிதி (மாநில அரசு தரப்பு) ஆகியோா் உறுப்பினா்களாகவும் இடம்பெறுவா். இதில் பேரவைக் குழு பிரதிநிதிக்கு மாற்றாக யுஜிசி பிரதிநிதி உறுப்பினராக இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துணைவேந்தா்களாக இதுவரை அனுபவமிக்க கல்வியாளா்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், பொதுத் துறை நிறுவன முதுநிலை நிபுணா்கள் அல்லது பொது நிா்வாகம் சாா்ந்தவா்களும் இனி துணைவேந்தா்களாக நியமிக்க முடியும்.
கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்.இ., எம்.டெக் உள்ளிட்ட முநிலை பொறியியல் பட்டம் முடித்தவா்களை உதவிப் பேராசிரியா்களாக நியமிக்க முடியும். அவா்கள் யுஜிசி-யின் தேசிய அளவிலான தகுதித் தோ்வை (நெட்) எழுதி தகுதிபெற வேண்டிய அவசியமில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் வரைவு வழிகாட்டுதலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும், தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.