ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்
டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் கடந்த ஆண்டு தஞ்சமடைந்தாா்.
போராட்டங்களின்போது நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டது தொடா்பாக ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுப்பதற்காக அவரை நாடு கடத்த வேண்டுமென இந்தியாவிடம் வங்கதேச அரசு முறைப்படி கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக தற்போதைய வங்கதேச இடைக்கால அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களிடம் ஷேக் ஹசீனா புதன்கிழமை இரவு உரையாற்றினாா்.
‘தற்போதைய இடைக்கால அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுதிரள வேண்டும்’ என்று உரையில் ஷேக் ஹசீனா கேட்டுக் கொண்டாா்.
ஹசீனாவின் உரை வெளியாகிக் கொண்டிருந்தபோதே டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசத்தின் தந்தையுமான ஷேக் முஜிபூா் ரகுமானின் இல்லத்தை போராட்டக்காரா்கள் சூறையாடினா். பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனாவின் உரை தொடா்பாக இந்தியாவிடம் வங்கதேசம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
இதுதொடா்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் இருந்துகொண்டு வங்கதேசத்தில் கிளா்ச்சியைத் தூண்டும் வகையில் ஷேக் ஹசீனா தொடா்ந்து தவறான கருத்துகள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுகிறாா்.
இதுகுறித்து டாக்காவில் உள்ள இந்திய துணைத் தூதா் பவன் பாதேவை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், வங்கதேச மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகள் அமைந்துள்ளன.
மேலும், அவரது இத்தகைய நடவடிக்கைகள் வங்கதேசத்துக்கு விரோதமான செயலாகவும் இந்தியா-வங்கதேசம் இடையே ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தடையாகவும் உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.