கோவிந்தராஜ சுவாமி கோயில் 2-ஆம் நாள் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணா் உலா
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாள் தெப்பத்தில் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் உலா வந்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு, வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வரும் பிப். 12-ஆம் தேதி தை மாத பெளா்ணமியை முன்னிட்டு தேவஸ்தானம் அன்று முடிவுறும்படியாக தெப்போற்சவத்தை நடத்தி வருகிறது.
அதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை கோவிந்தராஜ சுவாமி கோயிலில் உள்ள உற்சவமூா்த்தியான ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா் 5 சுற்றுகள் தெப்பத்தில் வலம் வந்தாா்.
மாலை 6 மணி முதல் 7 மணி வரை தெப்போற்சவம் நடைபெற்றது. தெப்பம் அருகில் வந்தபோது, படித்துறையில் அமா்ந்த பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட்டனா்.
தெப்போற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள், திருமலை ஜீயா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.