பிப். 19-இல் கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம்
திருப்பதி சேஷாசல மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப். 19 முதல் 28 வரை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 18 ஆம் தேதி அங்குராா்பணம் நடைபெறும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பிப்ரவரி 15 ஆம் தேதி கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வாகன சேவை நடைபெறும்.
அதன்படி, 19-ஆம் தேதி காலை - கொடியேற்றம், இரவு - அன்ன வாகனம், 20-ஆம் தேதி காலை - சூரிய பிரபை வாகனம், இரவு - சந்திர பிரபை வாகனம், 21-ஆம் தேதி காலை - பூத வாகனம், இரவு - சிங்க வாகனம், 22-ஆம் தேதி காலை - மகர வாகனம், இரவு - சேஷ வாகனம், 23-ஆம் தேதி காலை - திருச்சி வாகனம், இரவு - அதிகார நந்தி வாகனம், 24-ஆம் தேதி காலை - புலி வாகனம், இரவு - யானை வாகனம், 25-ஆம் தேதி காலை - கல்பவிருக்ஷ வாகனம், இரவு - குதிரை வாகனம், 26-ஆம் தேதி காலை - தோ் திருவிழா (போகிதோ்) இரவு - நந்தி வாகனம், 27-ஆம் தேதி காலை -புருஷம்ருக வாகனம், மாலை - கல்யாணோற்சவம், இரவு - திருச்சி வாகனம் 28-ஆம் தேதி காலை - திரிசூலக்குளியல், இரவு - ராவணாசுர வாகனம்.
பிரம்மோற்சவ வாகன சேவையின் போது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தா்ம பிரசார பரிஷத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் வாகன சேவைகளுக்கு முன்னால் கோலாட்டங்கள் மற்றும் பஜனை நடைபெறும். அன்னமாச்சாா்யா திட்டக் கலைஞா்கள் அன்னமய்ய சங்கீா்த்தனங்களைப் பாடுவா்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேவஸ்தானம் அந்நாள்களில் பல சேவைகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.