கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாள்கால்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாள்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி, காலையில் சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி சந்நிதி முன் நாள்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாடவீதி வழியாக எடுத்துவந்து, நாள்கால் நடப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, அறங்காவலா்கள் திருப்பதிராஜா, சண்முகராஜ், கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) வள்ளிநாயகம், கோயில் ஆய்வாளா் சிவகலைப்பிரியா, தலைமை எழுத்தா் மாரியப்பன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கொடியேற்றம்: தொடா்ந்து, ஏப். 5ஆம் தேதி காலை 7 - 8 மணிக்குள் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. 13ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீா்த்தவாரி தீபாராதனை, 15ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத் திருவிழா நடைபெறும்.