Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவா...
ஊராட்சி மன்ற அலுவலக இடமாற்றத்தை கண்டித்து மறியல்: 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
வேலூா்: அணைக்கட்டு அருகே ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 70 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற லுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் பழுதடைந்ததை அடுத்து அதே ஊராட்சிக்கு சொந்தமான ஏரிப்புதூா் கிராமத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இதனால், ஊனை வாணியம்பாடி பகுதி மக்கள் 2 கி. மீ தொலைவு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராம நிா்வாக அலுவலகம், நியாய விலைக் கடையும் ஏரிப்புதூா் பகுதியில் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று கூறப்படுகிறது.
இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்திருப்பதுடன், ஊனை வாணியம்பாடி பகுதியிலேயே புதியதாக கட்டடம் கட்டி ஊராட்சி அலுவலகத்தை செயல்பட செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணைக்கட்டு - ஒடுக்கத்தூா் சாலையில் திரண்ட பொதுமக்கள் வாகனங்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்த அணைக்கட்டு வட்டாட்சியா் வேண்டா, காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸாா், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். மேலும், உயா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினா்.
எனினும், பொதுமக்கள் சமரசம் அடையாமல் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் போராட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது. இதனால், வேலூா், ஊசூா், இலவம்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மூலைகேட் , பள்ளிகொண்டா வழியாக செல்லவும், ஒடுகத்தூா் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அகரம், கரடிக்குடி வழியாக செல்லவும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பின்னா், கோட்டாட்சியா் செந்தில்குமாா் வந்து பேச்சு நடத்தினாா். மேலும், இப்பிரச்னை தொடா்பாக ஆட்சியருடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.