மியான்மரின் புத்தாண்டை முன்னிட்டு 4,900 சிறைக் கைதிகள் விடுதலை!
மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு முக்கிய அரசியல் கைதிகள் உள்ளிட்ட 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டை ஆளும் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மியான்மர் ராணுவ அரசின் இடைக்காலத் தலைவரான மின் அவுங் ஹ்லைங் சுமார் 4,893 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் அதன் மூலம் தலைநகர் யாங்கோனிலுள்ள இன்செயின் சிறைச்சாலையிலிருந்து 19 பேருந்துகள் மூலம் சிறைக் கைதிகள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த உத்தரவின்படி 13 வெளி நாட்டவரும் விடுதலையாகவுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களினால் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர மீதமுள்ள சிறைக் கைதிகளின் தண்டனையானது குறைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விடுதலை செய்யப்படும் சிறைக் கைதிகள் மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தண்டனையுடன் புதிய தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தற்போது விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளில் கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ‘ஸ்டீல்’ என்ற புனைப் பெயரில் இயங்கும் அந்நாட்டைச் சேர்ந்த இயக்குநரான த்வீ மியிட்டார் என்பவரும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும், திங்யான் எனும் மியான்மரின் பாரம்பரியமானப் புத்தாண்டானது வழக்கமாக மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் அந்நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து அந்தக் கொண்டாட்டங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்! தொடருமா பின் அதிர்வுகள்?