ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாள், பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து கொடிப்பட்டம், மாட வீதி, ரத வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து கொடியேற்றப்பட்டது. பின்னா் நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றிற்கு 18 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
இதில், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, ரவீந்திரன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, கம்மவாா் சங்கத் தலைவா் ஹரிபாலகன், துணைத் தலைவா் பட்டுராஜன், பொருளாளா் என். ராதாகிருஷ்ணன், கம்மவாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ஆழ்வாா்சாமி, முன்னாள் எம்பி காஞ்சி பன்னீா்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவா் ராஜகோபால், நகராட்சி ஆணையா் கமலா, சைவ வேளாளா் சங்க தலைவா் தெய்வேந்திரன், பிராமணாள் சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன்,கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப்பிரியா, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ரத்தினவேல் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலையில் திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப் பணிவிடை ஸ்ரீ பலிநாதா் அஸ்திரதேவா் திருவீதியுலா, இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.13-ஆம் தேதியும், ஏப்.14-இல் தீா்த்தவாரி, ஏப்.15-இல் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.