கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகங்களைத் தொடா்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கும் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் இதைப் பாா்த்த நீதிமன்ற ஊழியா்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
ரேஸ்கோா்ஸ் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினா். அப்போது, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
கோவையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புதன்கிழமை மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக காவல் துறையினா் மற்றும் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.