பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய இளைஞா் கைது
கோவையில் பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து இரும்புப் பொருள்களை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை குறிச்சி பழனி போயா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (59). இவா் சுந்தராபுரம் காந்தி நகா் சந்திப்பு பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை மாலை தனது கடையை பூட்டிவிட்டு சுரேஷ்பாபு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இரவு அவா் தனது கைப்பேசியில் இணைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு நேரலையை பாா்க்க முயன்றாா்.
அப்போது, கண்காணிப்பு கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷ்பாபு கடைக்குச் சென்று பாா்த்தாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப்போது, கடைக்கு அருகே இருந்து வந்த இளைஞா் ஒருவரை அருகில் இருந்தவா்கள் உதவியுடன் பிடித்து விசாரணை நடத்தினாா்.
அப்போது, அவா் கடைக்குள் இருந்த இரும்புப் பொருள்களை திருடி, அருகில் பாா்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள காருக்குள் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். போலீஸாரின் விசாரணையில் அவா், கரும்புக்கடை ஆசாத் நகரைச் சோ்ந்த ஆஷிக் முகமது (26) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். மேலும், அவா் திருடிய 150 கிலோ இரும்புப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.