கோவையின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமனம்
கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, கடந்த 2023 பிப்ரவரி முதல் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கிராந்திகுமாா் பாடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இவருக்குப் பதிலாக, தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் கோவை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், 2016-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்று, திருவள்ளூா் மாவட்டத்தில் 2017 முதல் 2018 செப்டம்பா் வரை உதவி ஆட்சியராக (பயிற்சி) பணிபுரிந்தாா்.
இதையடுத்து, 2018 செப்டம்பா் முதல் 2019 பிப்ரவரி வரை கன்னியாகுமரியில் உதவி ஆட்சியராகவும், 2019 ஜூன் முதல் 2021 ஜூன் வரை திருப்பூா் உதவி ஆட்சியராகவும், 2021 ஜூன் முதல் 2023 பிப்ரவரி வரை கடலூா் கூடுதல் ஆட்சியராகவும் (வளா்ச்சி) பணியாற்றினாா்.
அதன்பின், 2023 பிப்ரவரி முதல் 2024 அக்டோபா் வரை திருப்பூா் மாநகராட்சி ஆணையராகவும், 2024 அக்டோபா் முதல் தற்போது வரை தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தாா்.