பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது; காா், கைப்பேசிகள் பறிமுதல்
கோவையில் சுமாா் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை சாய்பாபா காலனி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எம்ஜிஆா் மாா்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த கெளதம் (26) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, சுந்தராபுரம் போலீஸாா் ரோந்து சென்றபோது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிபிரசாத் (22), பரமக்குடியைச் சோ்ந்த தினேஷ் மணிகண்டன் (22) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடம் இருந்த 260 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனா்.
இதுதவிர கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவிநாசி சாலை காவலா் பயிற்சிப் பள்ளி அருகே சுற்றித்திரிந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த முகேஷ், ஷாஜி மோகன் மற்றும் இடையா்பாளையத்தைச் சோ்ந்த சல்மான் கான், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த விஷ்ணுபிரசாத் ஆகியோா் என்பது தெரியவந்தது.
அவா்களிடம் இருந்து 9.600 கிலோ கஞ்சா, நான்கு கைப்பேசிகள், ஒரு காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா்.