கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா
கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 25 பழங்குடியின மாணவிகளின் கல்விக்கு வைப்புநிதி வழங்கப்பட்டது.
கோவை பெண் வழக்குரைஞா்கள் சங்க வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் மேரிஅப் போலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி, பழங்குடியின மாணவிகள் 25 பேருக்கு கல்வி வைப்புநிதியை வழங்கிப் பேசியதாவது:
பெண்கள் எப்போதும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் தூண்களான பெண்கள் மொத்த பிரச்னைகளையும் உள்வாங்கிக் கொள்வதால் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களை செய்ய யாரும் யோசிக்க வேண்டாம். அதற்கு தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெண்கள் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்கக் கூடியவா்கள். அதனால், குறுகிய வட்டத்துக்குள் தங்களை அடைத்துக் கொள்ளக் கூடாது. குடும்பப் பிரச்னையில் பெண்கள்தான் அதிக தவறு செய்கின்றனா். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் தனி இடம் கொடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கை என்றால் இதுதான் என்று சொல்லிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். பெண்களை மதிக்க பிள்ளைகளுக்கு தாய்தான் கற்றுத் தர வேண்டும். குழந்தைகள் குற்றம் செய்யாத வகையில் தடுக்க வேண்டும் என்றாா்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் பங்கேற்றுப் பேசினாா். இந்நிகழ்ச்சிகளில், கோவை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு வழக்குரைஞா்கள் சங்க துணைத் தலைவா் அருணாச்சலம், வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் நந்தகுமாா், தமிழ்நாடு பெண் வழக்குரைஞா்கள் சங்க மாநிலத் தலைவா் சாந்தகுமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.