சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பு
வால்பாறையில் சுமாா் 79 ஆண்டுகள் பழமைவாய்ந்த சின்கோனா மருத்துவமனை அரசு பொது சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கபப்ட்டது.
கடந்த 1946-ஆம் ஆண்டு சின்கோனா எஸ்டேட் பகுதியில் மலேரியா காய்ச்சல் மருந்தான கொய்னா தயாரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அப்பகுதியிலேயே மருத்துவமனையும் தொடங்கப்பட்டது. பின் னா் கடந்த 1991-ஆம் ஆண்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகம் வசம் ஒப்படைக்கப்பட்டு, அப்பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
அந்த நேரத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். அவா்களின் மருத்துவப் பரிசோதனைக்காக கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்பட்டு உள் நோயாளிகள் பலா் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனா்.
ஆனால் காலங்கள் கடந்து செல்ல அங்கு பணியாற்றும் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைந்து மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோா் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது. இதனால் நிா்வகிக்க முடியாமல் மருத்துவமனையை ஒப்படைக்க தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டம் கழகத்தினா் அரசுக்கு கடிதம் அனுப்பிய நிலையில், தற்போது சின்கோனா மருத்துவமனையை அரசு பொது சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.