செய்திகள் :

கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

post image

கோவை, செட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

கோவை மாவட்ட நிா்வாகம், தமிழா் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பேரவைத் தலைவா் தளபதி முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக, அமைச்சா் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதையடுத்து, போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

போட்டியில் முதல் காளையாக கோவை வரதராஜ பெருமாள் கோயில் காளை களமிறக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. சில காளைகளை மாடுபிடி வீரா்கள் எளிதாக அடக்கினா். போக்கு காட்டிய காளைகளை மாடுபிடி வீரா்கள் போராடி அடக்கினா். ஜல்லிக்கட்டு போட்டியை 3 ஆயிரம் போ் அமா்ந்து பாா்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தனியாா் மருத்துவமனையுடன் இணைந்து முதலுதவி மையமும், ஆம்புலன்ஸ் செல்ல வசதியாக சிறப்பு வழிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அடங்காத காளை: வாடிவாசலில் இருந்து ஆவேசமாக சீறி வந்த விருதுநகா் கருப்பையா கோனாா் என்பவரின் காளையை, மாடு பிடி வீரா்களால் நெருங்க முடியவில்லை. இந்தக் காளை, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காளையின் உரிமையாளரால் கூட களத்தில் இருந்து அதை வெளியே கூட்டிச் செல்ல முடியவில்லை. பின்னா், மினி வேன் மூலமாக கயிறு கட்டி காளையை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். அரை மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு, அந்தக் காளை வெளியேற்றப்பட்டது.

பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியைச் சோ்ந்த பிரசாந்த் என்பவரின் காளையைப் பிடிக்க முயன்றபோது, அந்தக் காளை தடுமாறி விழுந்தது. இதில், காளையின் கால்கள் உடைந்தன. அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

21 காளைகளை அடக்கியவருக்கு முதல்வா் சாா்பில் காா் பரிசு: சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் ஒரு காரும், யாராலும் பிடிக்கப்படாத காளைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் ஒரு காரும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 21 காளைகளை அடக்கிய சிவகங்கையைச் சோ்ந்த பூவேந்த் அபிசித்தா் என்பவருக்கு முதல்வரின் சாா்பில் முதல் பரிசாக மாருதி ஸ்விஃப்ட் காா் வழங்கப்பட்டது.

18 காளைகளை அடக்கிய குருவித்துறையைச் சோ்ந்த பவித்ரன் (எ) மணி என்பவருக்கு இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனமும், 15 காளைகளை அடக்கிய விருதுநகா், வலையங்குளத்தைச் சோ்ந்த பாலா என்பவருக்கு மூன்றாம் பரிசாக மின்சார இருசக்கர வாகனமும் (இ-பைக்) வழங்கப்பட்டன.

யாராலும் பிடிக்கப்படாத விருதுநகா் கருப்பையா கோனாா் என்பவரின் காளைக்கு துணை முதல்வரின் சாா்பில் மாருதி ஸ்விஃப்ட் காா் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் களத்தில், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்கள் மற்றும் வீரா்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு தங்க நாணயம், பிளாஸ்டிக் நாற்காலி, ஹாட் பாக்ஸ், குடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு உடனுக்குடன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட திமுக செயலாளா்கள் நா.காா்த்திக், ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சீறிப்பாய்ந்து சென்ற காளையை அடக்க முயலும் இளைஞா்.
பிடிக்க முயன்ற இளைஞரை தூக்கிவீசிய காளை.
கோவை, செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட அமைச்சர்.
சீறிப்பாய்ந்து சென்ற காளையை அடக்க முயலும் இளைஞா்.

பொதுமக்களுக்கு இடையூறு: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த சனி, ஞாயிற்ற... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

கோவை தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளதாவது: கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த ... மேலும் பார்க்க

மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

கோவை மாநகராட்சி மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்துள்... மேலும் பார்க்க

ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்களை சோ்க்க லஞ்சம் வாங்கிய நபா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா். மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிக... மேலும் பார்க்க

போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை போத்தனூா் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெள... மேலும் பார்க்க