சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்
வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதுடன், பலத்த மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
இந்நிலையில், 49-ஆவது வாா்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் லோகநாதன் செவ்வாய்க்கிழமை திடீரென சாலையில் தேங்கிய மழைநீரில் உருண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
மேலும், பலமுறை புகாா் அளித்தும் மாநகராட்சி சாா்பில் 49-ஆவது வாா்டு பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மழைக் காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி காணப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினாா். இதைக்கண்டு பொதுமக்கள் ஏராளமானோா் அங்கு திரண்டனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாமன்ற உறுப்பினா் லோகநாதனிடம் பேச்சு நடத்தினா். தொடா்ந்து, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் சம்பவ இடத்துக்கு வந்தாா். அப்போது, அங்கிருந்த மக்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினா்.
பின்னா், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் கூறுகையில், கடந்த 10 ஆண்டுக் கால அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தற்போது திமுக ஆட்சியில்தான் புதை சாக்கடை பணிகள் முடிந்து விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு திட்டமிட்டே எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா்.
இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனிடையே, அதிமுக மாமன்ற உறுப்பினா் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.