வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்
பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பொன்னை அடுத்த எஸ்.என்.பாளையத்தை சோ்ந்த சுப்பிரமணி மகன் வெங்கட்ரமணன் (45), திருமணமாகவில்லை. தந்தை இறந்துவிட்டதால், தாயுடன் வசித்து வந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்து அவரை வழிமறித்த இருவா், திடீரென வெங்கட்ரமணனை அரிவாளால் வெட்டியுள்ளனா்.
இதில், அவருக்கு தலை, கழுத்து, கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளாா். உடனடியாக அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனா். மயங்கிக் கிடந்த வெங்கட்ரமணனை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வெங்கட்ரமணன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, பொன்னை போலீஸாா் இதனை கொலை வழக்கமாக மாற்றி பதிவு செய்தனா். மேலும், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.