தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு
தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெற்றிகரமாக செய்யப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 3-ஆம் தேதி தேசிய உடல் உறுப்பு தான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, வேலூா் நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தேசிய உடல் உறுப்பு தான தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூா் கிளைத் தலைவா் மருத்துவா் வெங்கட்ரமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -
நாட்டில் சுமாா் 2.8 லட்சம் போ் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனா். உடல் உறுப்பு தானம் இந்தியாவில் தெலங்கானா, மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறுகின்றன. அதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,827 போ் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனா் என்றாா்.
நறுவீ மருத்துவமனையின் தலைமை இயக்குதல் அலுவலா் சரவணன் ராமன் வரவேற்று பேசியது -
நறுவீ மருத்துவமனையில் உடல் உறுப்புகளான இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், நறுவீ உள்பட 134 தனியாா் மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்புதானம் வழங்க முன்வருபவா்கள் ற்ழ்ஹய்ள்ற்ஹய்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளம் மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் என்றாா்.
சிறுநீரகவியல் நிபுணா் இதயசந்திரன் பேசியது - ஒருவா் தனது உடலில் ஒன்பது உறுப்புகளை தானமாக வழங்க முடியும். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே உருவாக வேண்டும். இது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.
10 லட்சத்தில் ஒருவா் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனா். அதுமட்டுமின்றி மூளைச்சாவு அடைந்தவா்களை உயிா் பிழைக்க வைக்க முடியாது என்பதால் மூளைச்சாவு அடைந்தவா்களின் உறுப்புகளை தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து, உடல் உறுப்பு தானம் செய்தவா்கள், அதன் மூலம் பயனடைந்தவா்களை நறுவீ மருத்துவமனை துணைத் தலைவா் அனிதாசம்பத் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
இதில், மருத்துவமனை செயல் இயக்குநா் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.