சங்கரன்கோவில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீவிபத்து; அனுமதியின்றி செயல்பட்டதால் சீல் வைப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தீப்பெட்டித் தொழிற்சாலைக் கிடங்கில் திங்கள்கிழமை தீவிபத்து நேரிட்டதில், ரூ. 4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் சேதமடைந்தன. உரிய அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
சங்கரன்கோவில் புதுமனை 4ஆம் தெருவில் நந்தகுமாா் என்பவரது தீப்பெட்டித் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள கிடங்கில் தீக்குச்சிகள் தயாரிப்பதற்கான குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென தீவிபத்து நேரிட்டது. தொழிலாளா்கள் உடனடியாக பல்வேறு பாதைகள் வழியாக வெளியேறினா்.
தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தினா் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கட்டடத்தின் ஒருபகுதிச் சுவரை இடித்து, அதன் வழியாக தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தினா்.
இதில், ரூ. 4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூட்டைகள் சேதமடைந்தன. தொழிலாளா்கள் உடனடியாக வெளியேறியதால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.
கோட்டாட்சியா் கவிதா, அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இத்தொழிற்சாலை அனுமதியின்றி செயல்பட்டதாகவும், பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படாததும் தெரியவந்தது. அதையடுத்து, தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.