லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
சங்கரன்கோவில் நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவருக்கு எதிராக புதன்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றிபெற்ற தையடுத்து, திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி தலைவா் பதவியை இழந்தாா்.
சங்கரன்கோவில் நகராட்சியில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ தலா ஒருவா், சுயேச்சை 5 போ் என மொத்தம் 30 உறுப்பி னா்ககள் உள்ளனா்.
இதில் , நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி என்பவா் பதவி வகித்து வந்தாா்.
இந்நிலையில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, மாதந்தோறும் உறுப்பினா் கூட்டம் நடத்தவில்லையென்றும், 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்துவதால் மக்களின் அடிப்படை வசதிகளை செய்ய இயலவில்லையென்றும், இதனால் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி கடந்த ஜூன் 2 ஆம் தேதி அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், சுயேச்சை உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜிடம் மனு அளித்தனா்.
அதை ஏற்று, உமாமகேஸ்வரிக்கு எதிராக புதன்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என நகராட்சி உறுப்பினா்களுக்கு ஆணையா் கடிதம் அனுப்பியிருந்தாா்.
அதன்படி நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான விவாதம் நகராட்சிக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. தோ்தல் ஆணையராக நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜன் செயல்பட்டாா்.
இந்தக் கூட்டத்தில் 30 உறுப்பினா்களில் நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி வரவில்லை. மீதமுள்ள அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினா்கள் 29 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இதையடுத்து, தீா்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிந்ததும் தீா்மானத்திற்கு ஆதரவாக கையைத் தூக்கி வாக்களிக்க அறிவிக்கப்பட்டது. அப்போது தீா்மானத்திற்கு ஆதரவாக அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட 28 உறுப்பினா்கள் வாக்களித்தனா்.
தீா்மானத்திற்கு எதிராக 17 ஆவதுவாா்டு சுயேச்சை உறுப்பினா் விஜயகுமாா் மட்டும் வாக்களித்தாா். இதைத் தொடா்ந்து நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் உமாமகேஸ்வரி தனது நகா்மன்றத் தலைவா் பதவியை இழந்தாா்.
