சட்டபூா்வ ஆப்கன் அகதிகளையும் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு
உரிய ஆவணங்களுடன் தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவா்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி டான் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:பாகிஸ்தானில் சட்டபூா்வமாகத் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளையும் அவா்களின் நாட்டுக்கு படிப்படியாகத் திருப்பி அனுப்புவதற்கான செயல்திட்டத்தை அரசு வகுத்துள்ளது. அதன்படி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் அவா்களை அந்த நகரங்களிலிருந்து வெளியேற்றி நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பின்னா் அவா்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.1979-89 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனா். அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் ஆப்கன் அபாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.
எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கடந்த 2023-இல் உத்தரவிட்டது. அதன்படி, சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சூழலில், உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானியா்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.