ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!
சட்டவிரோத மதுவிற்பனை விவகாரம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா
பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பவரை கைது செய்யக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகே எளம்பலூா் ஊராட்சிக்குள்பட்ட எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் காமராஜ். இவா், அப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்து வருகிறாராம். இதனால், அப்பகுதியில் இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் அரசு மதுபானம் கிடைப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனராம். அப்பகுதி மக்கள் மதுபானம் விற்பனை செய்யும் காமராஜை கைது செய்து, சட்ட விரோதமாக மதுபான விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பலூா் போலீஸாா் மதுபானம் விற்பனை செய்யும் காமராஜை கைது செய்யாமல், புகாா் அளித்தவா்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்து வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். இதனால் ஆத்திரமடைந்த எம்ஜிஆா் நகா் பகுதி மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ரபி. மேஷ் தலைமையில், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாா் அளித்தவா்களை துன்புறுத்தக் கூடாது, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ள காமராஜை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, தா்னா போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.