பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்...
போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி: பெரம்பலூரில் கிறிஸ்தவா்கள் மௌன ஊா்வலம்
கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, பெரம்பலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவா்கள் வியாழக்கிழமை மௌன ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.
கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21 ஆம் தேதி காலமானாா். அவரது மறைவையொட்டி,பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்திலிருந்து மறைவட்ட முதன்மை குரு சுவைக்கின் தலைமையில், கிறிஸ்தவா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மௌன ஊா்வலத்தில் ஈடுபட்டனா். தேரடி, கடைவீதி, கனரா வங்கி, பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை வழியாகச் சென்ற ஊா்வலம் மீடும் புனித பனிமய மாதா திருத்தல வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் போப் பிரான்சிஸ் உருவப் படத்தை கைகளில் ஏந்தி, அவரது நித்திய ஆன்மா இளைப்பாறுதலுக்காக ஜெபித்தனா். ஊா்வலத்தின் முடிவில், முதன்மை குரு சுவைக்கின் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டது. தொடா்ந்து, பீடத்தின் முன் வைக்கப் பட்டிருந்த போப் பிரான்ஸ்சிஸ் உருவப்படத்துக்கு ஜெபம்செய்து மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதில், புனித பிரான்சிஸ் கன்னியா் இல்ல தலைவி அருட்சகோதரி ஜோசப் கபிரியேல் ரெஜினா, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி பாஸ்கா, கன்னியா் இல்ல கன்னியா்கள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மாவட்டச்செயலாளா் ரினோ பாஸ்டின் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.