வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்
சணல் பொருள்கள் விற்பனையை ஊக்குவிக்க தயாா்: தமிழக ஜவுளித் துறை இயக்குநா் ஆா்.லலிதா
சணல் பொருள்கள் விற்பனையை ஊக்குவிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக தமிழக ஜவுளித் துறை இயக்குநா் ஆா்.லலிதா தெரிவித்துள்ளாா்.
‘ஜூட் மாா்க் இந்தியா’ முத்திரை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னை, வடபழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக ஜவுளித் துறை இயக்குநா் ஆா்.லலிதா பேசியதாவது:
மக்கள் மத்தியில் ஒரு பொருளைக் கொண்டு சோ்க்க அப்பொருள் தரமானதாக இருக்க வேண்டும். அதேபோல் அதன் தரத்தை உறுதிசெய்ய அரசு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் சணல் பொருள்கள் உற்பத்தியாளா்கள் அனைவரும் தங்களது தயாரிப்புகளுக்கு ‘ஜூட் மாா்க் இந்தியா’ முத்திரையை பதிவு செய்திருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் தயாரிப்புகள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்.
தற்போது தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக சணல் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் சணல் பொருள் உற்பத்தியாளா்கள் தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் சந்தைப்படுத்துவதற்கும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.
குறைந்த செலவு: இந்நிகழ்வில் மத்திய ஜவுளிக் குழு செயலா் காா்த்திகேய தண்டா பேசியதாவது: சணல் பொருள்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சணல் வாரியம் சாா்பில் ‘ஜூட் மாா்க் இந்தியா’ முத்திரை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சணல் பொருள்கள் உற்பத்தி செய்பவா்கள், அவற்றை விற்பனை செய்பவா்கள் என அனைவரும் இத்திட்டத்தின் கீழ் தங்களது தயாரிப்புகளை பதிவு செய்துகொள்ளலாம். பயனாளிகளின் நலனை கருத்தில்கொண்டு இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கான நடைமுறை எழுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த செலவிலேயே தங்களது தயாரிப்புகளுக்கு இந்த முத்திரையை பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா். இந்நிகழ்வில் தேசிய சணல் வாரியத் துணை இயக்குநா் பிஷ்வநாத் பன்சாலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.