திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்! எம்.பி.க்கள் வலியுறுத்தல்
சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் உயர் ரத்த அழுத்தம் - இளைஞர்களே உஷார்!
மே 17 - ’உலக ஹைபர்டென்ஷன் நாள்’ அதாவது, ’உயர் ரத்த அழுத்தம்’ பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக கடைப்பிடிக்கப்படும் நாளாகும். அப்படிப்பட்டதொரு நாளில், இந்த உயிர்க்கொல்லி நிலையைப் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் கட்டாயம் தேவை.
ரத்த அழுத்த அளவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம், உடலில் ஹைபர்டென்ஷன் என்கிற நிலை இருக்கிறதா அல்லது இயல்பான அளவில் ரத்த அழுத்தம் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ரத்த அழுத்தம் 140/90 எம்எம் அளவைவிட அதிகரித்து காணப்பட்டால் ஆபத்து நெருங்குகிறது என்று அறிகுறி.

தொடர்ச்சியாக ஹைபர்டென்ஷனுக்கு மருத்து எடுத்துக்கொண்டிருந்தாலும் ரத்த அழுத்தம் சீராகாமல் இருந்தால், ‘ரீனல் டீநெர்வேசன் தெரபி (ஆர் டி என்)’ என்கிற நவீன சிகிச்சை முறைக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் மாறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இன்றைய இளம் தலைமுறைக்கு நெடுநேரப் பணி, அதிக அழுத்தமான சுற்றுப்புறச் சூழலில் வாழ்தல், சரியான தூக்கம் இல்லாமை, உணவுகளைச் சரியான நேரத்தில் உண்ணாமல் தவிர்த்தல், துரித உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்காமல் இருப்பது அல்லது உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் ஹைபர்டென்ஷன் நிலை உடலில் ஏற்படக்கூடும்.
ஆனால், இந்த காலத்தில் பலரும் தங்களுக்கு ஹைபர்-டென்ஷன் வரும், என்பதை அறியாமலேயே அந்த நிலையில் வாழ்வதுதான் கவலைக்குரிய விஷயமே.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிலை இப்போது இளைஞர்களிடம் காணப்படுகிறது. 20 முதல் 30 வயது வரையிலான பருவத்திலுள்ள பெரும்பாலான இளையோருக்கு உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்படுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.
அதிலும் குறிப்பாக, இந்தியாவில் ஐடி துறையில் பணியாற்றுவோரை ஹைபர்-டென்ஷன் அதிகம் பாதிக்கிறது. சமீபத்தியதொரு ஆய்வு முடிவுகளின்படி, இத்துறையைச் சார்ந்தோரில் 31 சதவீதம் பேருக்கு ஹைபர்டென்ஷன் உள்ளதாகவும், 45.7 சதவீதத்தினர் ஹைபர்டென்ஷன் பாதிப்புக்குள்ளாகலாம் என்கிற அபாய நிலையில் வாழ்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித அறிகுறியும் இல்லாமல் உடலில் குடியிருக்கும் இந்த அபாய ரத்த அழுத்த அளவு, நாளடைவில் உடலில் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகங்கள் மட்டுமில்லாது ரத்த நாளங்களை கடுமையாக பாதிக்கிறது. அதன் விளைவு, உயிரையே கொல்லும் எமனாகவும் மாறுகிறது!