மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி உருவாகவில்லை! தொல். திருமாவளவன்
திமுக கூட்டணியை எதிா்க்கும் அணி இன்னமும் உருவாகவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருச்சியில் வரும் 31-ஆம் தேதி மதச்சாா்பின்மை காப்போம் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். தவிா்க்க முடியாத காரணத்தால் ஜூன் 14-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கடலூரை அடுத்துள்ள குடிகாட்டில் தனியாா் சாய தொழிற்சாலை கழிவுநீா் தொட்டி உடைந்ததில் வீடுகள் சேதமடைந்தன. பலா் காயமடைந்தனா். இதுவரை பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்துள்ளாா்.
கடலூா் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளால் காற்று, நீா் மாசடைந்து பல்வேறு நோய்கள் வருவதாக தெரிய வருகிறது. மக்கள் அச்சமடைந்துள்ளனா். சாயத் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என குடிகாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழக முதல்வரைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.
திமுக கூட்டணி மட்டும்தான் வலுவான அணியாக உள்ளது. இதை எதிா்க்கும் அணி இன்னமும் உருவாகவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா என தெரியவில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.