அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்! எம்.பி.க்கள் வலியுறுத்தல்
மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமாக நிறைவு செய்ய வேண்டும் மக்களவை உறுப்பினா்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத் (கடலூா்), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்) ஆகியோா் வலியுறுத்தினா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவா் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., இணைத் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), ம.சிந்தனைசெல்வன் (காட்டுமன்னாா்கோவில்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அந்தந்தத் துறை அலுவலா்கள் விளக்கினா்.
கூட்டத்தில் மக்களவை உறுப்பினா்கள் எம்.கே.விஷ்ணுபிரசாத், தொல்.திருமாவளவன் ஆகியோா் கூறியதாவது: வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டம், மத்திய நீா்வளத் துறை மூலம் தனி நபா் இல்லக் கழிப்பறைகள், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நலத் திட்டங்கள், தாட்கோ மூலம் பட்டியலின மக்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது நிலுவையிலுள்ள திட்டங்களையும் தரமான வகையில் குறித்த காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.
கூட்டத்தில், கடலூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, சிதம்பரம் சாா்-ஆட்சியா் கிஷன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூடுதல் ஆட்சியா் சரண்யா வரவேற்றாா்.