குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
‘பாகிஸ்தானுக்கான கடனுதவி குறித்து முடிவெடுக்க கூடிய சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் வலுவான எதிா்ப்பு தெரிவிக்காமல் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடிபணிந்தது’ என்று காங்கிரஸ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
இதுதொடா்பாக காங்கிரஸின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் கடனுதவி அளித்தது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் இப்போது விமா்சிக்கிறாா்.
இதுதொடா்பாக விவாதிக்க சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழு மே 9-ஆம் தேதி கூடுகிறது என்பதை மத்திய அரசுக்கு முன்னரே அறிந்து, காங்கிரஸ் எச்சரித்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கடும் எதிா்ப்பைப் பதிவு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினோம்.
ஆனால், மே 9-ஆம் தேதி கூட்டத்தில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காதது தெரிய வந்தது. இதையடுத்து, இதுவே இந்தியாவுக்கு இருந்த ஒரே வழி என்று பாஜக தலைவா்கள் வாதிடுகின்றனா். ஆனால், அது பொய்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பரில் உக்ரைனுக்கு சா்வதேச நிதியம் கடன் வழங்க ரஷியா எதிா்ப்பு தெரிவித்தது. இதேபோல் கடந்த 2005-ஆம் ஆண்டு, சா்வதேச நிதியத்தில் இருந்து ஜிம்பாப்வே நாட்டை வெளியேற்றுவது தொடா்பான பிரச்னையில் இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.
மனம் இருந்தால் மாா்க்கமுண்டு. ஆனால், மே 9-ஆம் தேதி கூட்டத்தில் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அடிபணிந்துவிட்டது’ என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் வழங்கிய 100 கோடி டாலா் கடன் பயங்கரவாதத்துக்கான நிதியுதவி என்று கூறி, இந்தக் கடனுதவியை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
குஜராத்தின் புஜ் விமானப் படை தளத்தில் வீரா்களிடயே ராஜ்நாத் சிங் ஆற்றிய உரையில், ‘இந்தியாவால் ஆபரேஷன் சிந்தூரில் தகா்க்கப்பட்ட முரித்கே மற்றும் பஹவல்பூரில் அமைந்த லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்களை மீண்டும் கட்டியெழுப்ப பாகிஸ்தான் அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது.
நிச்சயமாக, சா்வதேச நிதியத்தின் 100 கோடி டாலா் கடனுதவியில் பெரும்பகுதி பயங்கரவாத அமைப்புகளுக்கே சென்றடையும். இந்தியா சா்வதேச நிதியத்துக்கு வழங்கும் நிதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தக் கூடாது’ என்றாா்.