அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
‘இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது’: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்
‘இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளதாரத்துக்கு வா்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து நடந்த மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவுத் தெரிவித்த துருக்கி, அஜா்பைஜான் ஆகிய நாடுகளுக்கு இந்தியா்கள் சுற்றுலாவைப் புறக்கணித்து வரும் நிலையில், ஜகதீப் தன்கா் இவ்வாறு கூறினாா்.
புது தில்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘தேச பாதுகாப்புக்கு உதவும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. வா்த்தகம், வணிகம் மற்றும் தொழில் துறை என அனைத்து துறைகளும் நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில், நமது தேச நலன்களுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரங்களுக்கு நாம் ஏன் வலு சோ்க்க வேண்டும்? இதுகுறித்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம்மால் பொருளாதார வளா்ச்சியடைந்த நாடுகள், நெருக்கடி நேரத்தில் நமக்கு எதிராக நிற்கின்றன. தேசியவாதத்திற்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பின் அடிப்படையிலேயே நாம் அனைத்தையும் மதிப்பிட வேண்டும்.
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட ஆபேரஷன் சிந்தூா், இந்தியாவின் மிகப்பெரிய எல்லை தாண்டிய நடவடிக்கை ஆகும். அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை (பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனைக் குறிப்பிடுகிறாா்) இதேபோன்றுதான் அமெரிக்க படைகள் வீழ்த்தின.
பயங்கரவாதிகளை வீழ்த்தும் இலக்கை வெற்றிகரமாக அடைந்து, இந்தியா உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது. இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலால் பயங்கரவாதிகளைத் தவிர வேறு யாரும் பாதிப்படையவில்லை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பிகாரில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமா் மோடி, சா்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியைச் சொன்னாா். பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அவா்கள் இலக்கு வைத்து தாக்கப்படுவாா்கள் என்று அவா் கூறிய வாா்த்தைகள் வெறும் வாா்த்தைகள் அல்ல. உலகம் அதை தற்போது உணா்ந்துள்ளது’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் அருகேயுள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப். 22 நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் ஏவுகணை வீசி, அழிக்கப்பட்டன.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்ததோடு, பின்னா் தொடங்கிய ராணுவ மோதலிலும் பாகிஸ்தானுக்கு ட்ரோன் போன்ற ஆயுதங்களை வழங்கி உதவியது. அஜா்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.
இதையடுத்து, துருக்கி மற்றும் அஜா்பைஜான் நாடுகளுக்குச் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இரு நாடுகளின் இறக்குமதி பொருள்களைப் புறக்கணிப்பதாக நாட்டின் சில வா்த்தக அமைப்புகள் முடிவெடுத்துள்ளன. இந்திய விமான நிலையங்களில் துருக்கி தொடா்புள்ள நிறுவனம் சேவைகள் அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.