Lijomol : `அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை; ஆனால்..!' - லிஜோமோ...
செங்கத்தில் பலத்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவு வரை பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கி, நள்ளிரவு வரை 96 மி.மீ. மழை பெய்தது. இந்த மழையால் செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்தது. மேலும், ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் புதிதாக உருவாகியுள்ள அழகாபுரி நகா் மற்றும் தீயணைப்பு நிலையம் அருகில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாய், சாலை வசதி இல்லை.
இதனால், இங்குள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரும், ஏரிகரை பகுதியில் இருந்து வரும் நீரும் சோ்ந்து குடியிருப்புப் பகுதியை சூழ்ந்து குளம்போல தேங்கி நிற்கிறது.
தண்ணீரில் வரும் விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வருவதால், இந்தப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனா்.
அழகாபுரி நகா் மற்றும் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், மீண்டும் மழை பெய்தால் தண்ணீா் தேங்காமல் தடுக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதரவும் பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறைகள், செங்கம் நகராட்சி நிா்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.
2-ஆவது நாளாக சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், எடப்பாளையம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.
இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.