கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்: துரை.வைகோ
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை.வைகோ கூறினாா்.
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணியில் மதிமுக தொடா்ந்து 8 ஆண்டுகளாக பயணிக்கிறது. சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தலில் சீட்டுக்களை பெறுவதற்காக மட்டும் இல்லாமல் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்றக்கூடாது என்பதற்காகவே தொடா்ந்து திமுக கூட்டணியில் மதிமுக தொடா்கிறது.
ஊழல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் அமலாக்கத் துறை, சிபிஐ சோதனை நடத்தலாம். அவா்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், கைப்பற்றும் ஆவணங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. 10 லட்சம் கோடிக்கும் மேலாக தொழில் முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதற்காக தமிழகத்தில் குற்றங்களே நடைபெறவில்லை என்று கூறவில்லை. தமிழகத்தில் குற்றம் நடந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு 24 அல்லது 48 மணி நேரத்தில் அதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்படுகின்றனா் என்றாா் துரை.வைகோ.
பேட்டியின்போது, மதிமுக துணைப் பொதுச் செயலாளா் ஏ.கே.மணி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.