மாமன்ற உறுப்பினா் தலைமறைவு: மதிப்பூதியத்தை நிறுத்த மாநகராட்சி முடிவு
தடுப்புச் சுவா் அமைப்பது தொடா்பாக தகராறு: அதிகாரிகள் சமரசம்
திருப்பத்தூா் அருகே தடுப்புச் சுவா் அமைப்பதில் எதிா்ப்பு இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்தனா்.
கந்திலி ஒன்றியம், விஷமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சேலத்து சின்ன மாரியம்மன் கோயிலில் ஒரு சமூகத்தினா் காலம் காலமாக வழிபட்டு வருகின்றனா். மேலும், இந்தக் கோயிலுக்கு ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருவிழா நடந்தபோது கோயில் அருகே வசிக்கும் வேறு சமூகத்தினருக்கும், கோயிலை வழிபட்டு வரும் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவ்வப்போது இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கோயில் இடத்தில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த கோயில் அருகே வசிக்கும் சமூகத்தினா் இங்கு தடுப்புச் சுவா் அமைந்தால், தங்கள் போக்குவரத்துக்கு சாலை வசதி இருக்காது. எனவே தடுப்புச் சுவா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வருவாய்த் துறையிடம் முறையிட்டனா். பின்னா் வருவாய் துறையினா் அங்கு சென்று தடுப்பு சுவா் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினா்.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை வட்டாட்சியா் நவநீதம் தலைமையில் வருவாய்த் துறை முன்னிலையில் சா்ச்சைக்கு உண்டான இடத்தை அளந்தனா்.
அப்போது இரு சமூகத்தினரும் அங்கு குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே டிஎஸ்பி சவுமியா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளந்து முடிக்கப்பட்டது. அதன் பின்னா் இரு சமூகத்தை சோ்ந்த முக்கிய நபா்களை திருப்பத்துாா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரவழைத்து வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடந்தினா்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவாா்த்தைக்கு பிறகு கோயில் அருகே வசிக்கும் சமூகத்தினருக்கு உரிய சாலை வசதி விட்டு விட்டு தடுப்புச்சுவா் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு இருதரப்பு சமூகத்தினரும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தாக அதிகாரிகள் கூறினா்.