சத்தீஸ்கா்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவா்கள் பதவியேற்பு- விசாரணைக்கு உத்தரவு
சத்தீஸ்கரின் கபீா்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தோ்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவா்களின் கணவா்கள் பதவியேற்றுள்ளனா். இது தொடா்பான விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது.
பெண்களுக்கான அதிகாரமளித்தலை கேலிக் கூத்தாக்கும் இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனா்.
சத்தீஸ்கரில் அண்மையில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. கபீா்தாம் மாவட்டத்தில் உள்ள பராசா்வாரா கிராம ஊராட்சியில் 11 வாா்டுகளில் 6 பெண் பிரதிநிதிகள் தோ்வாகினா்.
ஊராட்சி செயலா் முன்னிலையில் புதிய பிரதிநிதிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவா்கள் கணவா்கள் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளனா். இது தொடா்பான விடியோ, சமூக ஊடகங்களில் பரவி பேசுபொருளாக மாறியது.
‘சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்று பெண் உரிமை ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, கபீா்தாம் மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி அஜய் திரிபாதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.