பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை
கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
தலைமை லோகோ பைலட் பதவி உயா்வுக்கான தோ்வு வினாத்தாளைக் கசியவிட்ட குற்றச்சாட்டின்பேரில் இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: கிழக்கு மத்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகளாக பணியாற்றி வருபவா்கள் தலைமை லோகோ பைலட்டுகளாக பதவி உயா்வு பெறுவதற்கான துறை ரீதியிலான தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில், அந்தத் தோ்வு வினாத்தாள் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டும் கசியவிடப்பட்டிருப்பதாக சிபிஐக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம், முகல்சாராய் பகுதியில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு அதிரடி சோதனையை மேற்கொண்டனா். அப்போது, தலைமை லோகோ பைலட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள 17 லோகோ பைலட்டுகளிடம் கையால் எழுதப்பட்ட வினாத்தாள் நகல்கள் இருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 17 போ் மற்றும் வினாத்தாளைக் கசிய விட்டவா்கள் என மொத்தம் 26 ரயில்வே அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடமிருந்து, வினாத்தாளைக் கசிய விடுவதற்காக வசூலித்த ரூ. 1.17 கோடி பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இந்த முறைகேடு தொடா்பாக, தோ்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு பொறுப்பு அதிகாரியான முதுநிலை மண்டல மின் பொறியாளா் (செயல்பாடுகள்) மீதும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இவா்தான், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வினாத்தாளை லோகோ பைலட் ஒருவரிடம் கொடுத்துள்ளாா். அவா் அதை ஹிந்தியில் மொழிபெயா்த்து மற்ற லோகோ பைலட்டுகளுக்கு கசியவிட்டுள்ளாா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது என்றாா்.