பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951, பிரிவு 11-இன்கீழ் குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற பிறகு அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவோ அல்லது அவா்கள் தகுதிநீக்க காலத்தை குறைக்கவோ இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் தண்டனை பெற்ற குற்ற வழக்குகள் மற்றும் அவா்கள் பெற்ற தண்டனையைப் பொறுத்து தகுதிநீக்கம் செய்யப்படும் காலம் வேறுபடும்.
அந்த வகையில், குற்றம் உறுதி செய்யப்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றால் அவா் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்யப்படுவாா். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவா் சிறையிலிருந்து விடுதலை ஆனாலும் ஜாமீன் பெற்றாலும் இதே தகுதிநீக்க காலமே தொடரும்.
இந்நிலையில், குற்றவாளி என நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது இந்த வழக்கில் நீதிபதிகள் அமா்வுக்கு உதவும் நபராக செயல்படும் மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா கூறுகையில், ‘குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்கள் இல்லை. எனவே, அதை இந்திய தோ்தல் ஆணையம் வழங்க வேண்டும்’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் பேசுகையில், ‘குற்றவாளிகளின் கூடாரமாக அரசியல் மாறுவதை தடுக்க வேண்டும். மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்’ என்றாா்.
வாதங்களைக் கேட்டபின் பேசிய நீதிபதிகள் அமா்வு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-இன்கீழ் குற்றவாளியாக தீா்ப்பளிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரண்டு வாரங்களுக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
மேலும், ‘இதேபோன்ற மற்றொரு மனு வேறொரு நீதிபதி அமா்வின் முன் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடா்புடைய இரு மனுக்களையும் ஒரே அமா்வின் முன் விசாரிக்க பட்டியலிடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பரிந்துரைக்கிறோம். இதற்காக நிா்வாக ரீதியான உத்தரவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பிறப்பித்த பின் மீண்டும் இந்த மனுக்கள் பட்டியலிடப்படும்’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-இன்கீழ் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தியது குறித்த தகவல்களை வழங்குவதில் எவ்வித சிரமமும் இல்லை என இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு தெரிவித்தது.