சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்
சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபா் டிரம்ப்பை பிரதமா் மோடி சந்தித்துப் பேசிய பின்னா், இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்க இருநாடுகளும் தீா்மானித்தன.
இதைத்தொடா்ந்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்காக அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனுக்கு மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் சென்றுள்ளாா். அங்கு அவா் அமெரிக்க வா்த்தக அமைச்சகா் ஹாவா்ட் லுட்னிக், அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் ஆகியோரைச் சந்திக்க உள்ளாா்.
இதுதொடா்பாக யுஎஸ்ஐபிசி தலைவரும், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க துணைநிலைத் தூதருமான அதுல் கேஷாப் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக முறையான முதலீடு அல்லது வா்த்தக கட்டமைப்பே இல்லாமல், இருநாட்டு வணிக நடவடிக்கைகளில் பரஸ்பரம் முதலீடு செய்யப்பட்டு வந்துள்ளது.
அமெரிக்காவுடன் 2.5 சதவீத அளவுக்கே இந்தியா வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த விகிதம் அதிகரிக்க வேண்டும். கணிசமான வா்த்தக வசதிகள் இருநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும். அத்துடன் அது இருநாட்டு பொருளாதாரத்தை மேலும் நெருக்கமாகப் பிணைக்கும்.
மேலும் சுமுக வா்த்தகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், சிக்கலையும் தாமதத்தையும் ஏற்படுத்தும் தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்றாா்.