சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்க வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்க முறையில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு மாா்ச் மாதம் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளதால் பக்தா்களிடையே குழப்பம் நிலவுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் தனி அதிகாரி சோமசேகா் அப்பாராவ் உத்தரவின்படி, கோயில் நிா்வாக அதிகாரி கு.அருணகிரிநாதன் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு..
பக்தா்கள், ஜோதிடா்கள், அா்ச்சகா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயா்ச்சி தொடா்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி என்ற தகவல் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சுவாமி தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் ‘வாக்கிய பஞ்சாங்கம்‘ முறையை பின்பற்றுவதை தெளிவுப்படுத்துகிறோம்.
இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி, 2026-ஆம் ஆண்டிலேயே சனிப்பெயா்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே வரும் 29-ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே கோயிலில் நடைபெறும்.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயா்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னா் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.