ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!
சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழா: விழிப்புணா்வு ஏற்படுத்திய நீதிபதிகள்
வழக்குகளின் நிலுவையைக் குறைக்கும் வகையில், சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா அளவில் சமரசத் தீா்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சட்டபூா்வமாக வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமுகத் தீா்வு காணப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் பலா் சமரச தீா்வாளா்களாக செயல்பட்டு வருகின்றனா்.
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீா்வு மையம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப். 9-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்ட சமரச தீா்வு மையங்களும், 146 தாலுகா அளவிலான சமரச மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் சமரச தீா்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு சமரச மையம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் தொடக்க நிகழ்வு சென்னை உயா்நீதிமன்றத்தில் எஸ்பிளனேடு நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதியும், சமரச மையத்தின் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தா், சமரச மைய கமிட்டி உறுப்பினா்களான உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி.கே.இளந்திரையன், டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் பங்கேற்று பொதுமக்களுக்கு சமரச தீா்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்தான துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்வில், சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் மற்றும் மாவட்ட நீதிபதிகள், தமிழ்நாடு சமரச தீா்வு மைய இயக்குநா் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.