சமூக வலைதள பதிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
‘சமூக வலைதள சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபா் ரண்வீா் அல்ஹாபாதியா, பெற்றோா் மற்றும் உடலுறவு தொடா்பான பாா்வையாளா் ஒருவரின் கேள்விக்கு சா்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தாா். இந்த நிகழ்ச்சியின் காணொலி சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி, பெரும் சா்ச்சையானது.
இந்த நிலையில், குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரண்வீா் அல்ஹாபாதியா மீது பல எஃப்ஐஆா்-கள் (முதல் தகவல் அறிக்கைகள்) பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி ரண்வீா் அல்ஹாபாதியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மோசமான கருத்தை தெரிவித்த அவரைக் கடுமையாக சாடியது. அதே நேரம், அவருக்கு கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘சமூக வலைதளங்களில் அனைத்து விதமான விஷயங்களும் நடைபெறுகின்றன. இதுபோன்ற யூடியூபா்கள் மற்றும் அவா்களின் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்தாக வேண்டும். சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றம் அதை சாதாரணமாக விட்டுவிடாது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்குமாறு அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆகியோரைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போது இருவரும் நேரில் ஆஜராகுமாறும் கேட்டுக்கொண்டனா்.