நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
`சலூன் கடைக்காரர் மகன் டு ஆஸ்கர் பாடல்' - ராகுலுக்கு ரூ.1கோடி ஊக்கத்தொகை அறிவித்த தெலங்கானா முதல்வர்
RRR திரைப்படத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடல் மூலம் பிரபலமடைந்த பாடகர் ராகுல் சிப்லிகுஞ்சுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்து அறிவித்துள்ளார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.
மிகவும் எளிமையான பழைய ஹைதராபாத் நகரில் இருந்து வந்திருக்கும் ராகுல், தெலங்கானா இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைவராக இருந்த ரேவந்த் ரெட்டி, பாடகர் ராகுல் சிப்லிகுஞ்சுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அப்போதே காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்தால் அவருக்கு 1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார் ரேவந்த் ரெட்டி.
தேர்தல் வக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஹைதராபாத்தில் போனாலு திருவிழா நெருங்கும் நேரத்தில் இந்த ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர்.
யார் இந்த ராகுல் சிப்லிகுஞ்ச்?
2009ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் இயங்கும் ராகுல், 50க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். பல பாடல்கள் எழுதியுள்ளார்.
யூ-டியூபில் இவரே எழுதி பாடியுள்ள மகஜாதி, மக்கிரிக்கிரி போன்ற சுயாதீனப் பாடல்கள் மில்லியன் பார்வைகளைத் தாண்டியிருக்கின்றன. 36 வயதாகும் இவர் 2019ம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் வெற்றியாளரும் கூட.
ஒரு சலூன் கடைக்காரரின் மகனாகப் பிறந்து ஆஸ்கர் மேடையை எட்டியுள்ளதால் ராகுல் பல இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பவராக உள்ளார்.