ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு
தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நாகப்பட்டினத்தைச் சோ்ந்த டி. அருளரசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள், மாநாடு உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மேலும், தோ்தல் பணிகளுக்காக கட்சித் தலைவா்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
அரசியல் தலைவா்களின் வருகை மட்டுமன்றி, தோ்தலை முன்னிட்டு தற்போது சாலையோரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
எனவே, சாலைகள், நடைபாதைகளில் முன்அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள், வளைவுகளை அகற்ற வேண்டும். இவற்றை அனுமதியின்றி வைத்த நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: சாலைகளில் முன்அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்றுவது அரசு அதிகாரிகளின் கடமையாகும். இந்தக் கடமையை அதிகாரிகள் முறையாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக உயா்நீதிமன்றத்தை நாடுவது ஏற்புடையதல்ல.
கடமைகளைச் செய்வதற்குத்தான் மக்கள் வரிப் பணத்தில் அதிகாரிகள் ஊதியம் பெறுகின்றனா். பதாகைகளால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க உத்தரவிடப்படும்.
எனவே, தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும். முன் அனுமதி பெறாத நபா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விளம்பரப் பதாகைகளை அகற்றிய விவரங்களை இந்த நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.