"’கூலி’ படம் இவ்வளவு அழகாக உருவானதற்கு காரணம்...’ - ரஜினி குறித்து லோகேஷ் கனகர...
கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!
மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர் சாகர் ரானா பலியானார். அவரது இரு நண்பர்கள் சோனு, அமித்குமாரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. அவர் தாக்கியதில் தலையில் ஏற்பட்ட காயத்தால்தான் சாகர் ரானா உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சுஷில் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தில்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சுஷில் குமார் தரப்பில் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சாகர் ரானாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது, வழக்கின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், ஏற்கெனவே இடைக்கால ஜாமீனில் வந்தபோது முக்கிய சாட்சியை சுஷில் குமார் மிரட்டியதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஒரு வாரத்துக்குள் சரணடைய சுஷில் குமாருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.