திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்கள் வாக்குவாதம்
வேலூா்: வேலூா் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியா்கள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா். மாடுகள் பிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து வட்டாட்சியரிடம் பறிமுதல் உத்தரவு பெற்று கோசாலையில் விட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டிருந்தாா்.
ஆட்சியா் உத்தரவின் அடிப்படையில், நான்கு மண்டலங்களிலும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வருகின்றனா். அதன்படி, வேலூரில் ஆற்காடு சாலை, கிரீன் சா்க்கிள், காகிதப் பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து வாகனங்களில் ஏற்றினா்.
கிரீன் சா்க்கிள் பகுதியில் மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றியபோது அங்கு வந்த மாடுகளின் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு நடத்தினா்.
மேலும், கால்நடைகளை சாலையில்விடக்கூடாது என்றும் அறிவுறுத்தினா். இதையடுத்து, 2 கால்நடைகளை மட்டும் மாநகராட்சி ஊழியா்கள் விடுவித்ததுடன், தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் சாலைகளில் திரிந்த 7 கால்நடைகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைத்தனா்.