பொய்கையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
வேலூா்: பொய்கையில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,408 போ் பயன்பெற்றனா்.
பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட உயா் சிறப்பு மருத்துவ முகாம்கள் வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த 6 முகாம்களிலும் 9,658 பெரியவா்கள், 429 சிறியவா்கள், 153 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றுள்ளனா். தவிர, இம்முகாமில் பங்கேற்ற 8,665 பேருக்கு ஆய்வக பரிசோதனைகளும், 8,999 பேருக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. 4,010 எண்ணிக்கையிலான தொழிலாளா்கள், அமைப்பு சாரா தொழிலாளா்கள் பயன்பெற்றுள்ளனா்.
தொடா்ந்து, 7-ஆவது மருத்துவ முகாம் அணைக்கட்டு வட்டம், பொய்கை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினா். 1,350 பெரியவா்கள், 58 குழந்தைகள் என 1,408 போ் பயன்பெற்றுள்ளனா்.
முகாமில் அணைக்கட்டு ஒன்றியக்குழு துணைத் தலைவா் சித்ரா குமாரபாண்டியன், கோட்டாட்சியா் செந்தில் குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) பியூலா ஆக்னஸ், பொய்கை ஊராட்சி தலைவா் வெங்கடேசன் பங்கேற்றனா்.