சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்
திருவண்ணாமலை அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையை அடுத்த பாலானந்தல் ஊராட்சி, பிள்ளையாா் கோவில் தெருவில் 6 மாதங்களாக குடிநீா் வரவில்லையாம்.
அந்தத் தெருவில் உள்ள குடிநீா்க் குழாய் உடைந்து தெருக்களில் தண்ணீா் தேங்கியதே இதற்குக் காரணம்.
எனவே, உடைந்த குடிநீா்க் குழாயை சீரமைத்து முறையாக குடிநீா் விநியோகம் செய்யக் கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதற்கிடையே, சாலையில் தண்ணீா் தேங்குவதால் அந்தச் சாலை சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாம்.
இதை சீரமைக்கக் கோரி முறையிட்டும் ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சேதமடைந்த சாலையில் வாழைச் செடிகள், நெல் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனராம்.
ஆனால், இந்தப் பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.