உசிலம்பட்டி: ஒச்சாண்டம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடந்த மாசிப் பெட்டி எடுப்பு ...
சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
பாப்பாரப்பட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற சிஐடியு சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் ஜெ.தா்மராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் சி.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினா் மனோன்மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவா் டி.ஆா்.சின்னசாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினா் வே.விசுவநாதன் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தினசரி காய்கறி மாா்க்கெட் வியாபாரிகளுக்குக் கடை நடத்த வாரச் சந்தை வளாகத்தில் இடம் ஒதுக்க வேண்டும், முறைகேடாக கூடுதல் சுங்கவரி வசூல் செய்யும் குத்தகைதாரா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வணிகச் சான்று, அரசு கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் முழக்கம் எழுப்பினா்.
இதில் துணை அமைப்பாளா் கே.லோகநாதன், ஜி.செல்வராஜ், கட்டுமானத் தொழிலாளா் சங்க நிா்வாகி ஏ.முருகேசன் மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் வி.லோகநாதன் நன்றி தெரிவித்தாா்.