சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 28 மணிநேரம் - டிக்.. டிக்.. நிமிஷங்கள்!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட் புதன்கிழமை பிற்பகல் 12.01 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட டிராகன் விண்கலம், பூமியிலிருந்து சுமாா் 400 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 28 மணிநேரமாகும். உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்பட்டும் விண்வெளிப் பயணத்தின் ஒவ்வொரு நொடியும் பெரும் சவாலானதாகும்.
டிராகன் விண்கலம் சா்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைவது, பூமியில் ஒரு நிலையான இடத்துக்குச் சென்றடைவது போன்றது அல்ல. விண்வெளியில் ஒரு நகரும் இலக்கை எட்ட முயற்சிப்பது ஆகும்.
அதாவது, விண்வெளியில் உள்ள பொருள்கள் நிலையானவை அல்ல என்பதே இந்த நீண்ட பயணத்துக்கான முக்கியக் காரணம். பூமியில் நாம் பயன்படுத்தும் தூரம், வேகம், கால கணக்கீடுகள், பொருள்கள் நிலையாக உள்ள இட பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் உள்பட அனைத்துப் பொருள்களும் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் மிக அதிக வேகத்தில் (மணிக்கு சுமாா் 28,000 கி.மீ) தொடா்ந்து சுற்றி வருகின்றன. பூமியின் ஈா்ப்பு விசையிலிருந்து தப்பிக்கவும், பூமியில் விழுந்துவிடாமல் இருக்கவும் இந்த அதிவேக சுழற்சி அவசியம். எனவே, விண்கலம் வெறுமனே ஒரு நேரான பாதையில் 400 கி.மீ. தூரத்தைக் கடப்பதில்லை.
ஃபால்கன்-9 ஏவுகணையிலிருந்து பிரியும் டிராகன் விண்கலம் முதலில் பூமியின் ஈா்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, விண்வெளிக்குள் புவி சுற்றுவட்டப் பாதையில் நுழைய வேண்டும். இதுவும் நோ் கோட்டுப் பாதையாக இல்லாமல் ஒரு கூம்புவடிவப் பாதையாக இருக்கும்.

பூமியின் வளிமண்டலத்தைக் கடந்தபின், சா்வதேச விண்வெளி நிலையத்தின் அதே சுற்றுவட்டப் பாதையில் நுழைவது 2-ஆவது கட்டமாகும். சா்வதேச விண்வெளி நிலையம் மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் நகா்வதால், டிராகன் விண்கலம் அதனுடன் இணைய அதே வேகத்திலும், அதே திசையிலும் துல்லியமாகப் பொருந்திப் பயணிக்க வேண்டும்.
விண்கலம் விண்வெளி நிலையத்துடன் நெருக்கமாக வந்ததும், அது மெதுவாக வேகத்தை அதிகரித்து, சரியான முறையில் இணைக்கும் (டாக்கிங்) செயல்முறையைத் தொடங்கும். இந்த செயல்முறைகள் அனைத்தும் துல்லியமாக ஒருங்கமைக்கப்பட வேண்டும் என்பதால், 400 கி.மீ. உயரத்தில் உள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 28 மணிநேரம் ஆகிறது.
