சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி
பெண்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று கூறி, வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பியிருந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாக்குத் திருட்டு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிலை டேக் செய்து, மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் ஒரு கடுமையான கருத்தை பதிவிட்டுள்ளார்.
வாக்குச் சாவடிகளுக்குள் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட விடியோவை வெளியிடும் விவகாரம் குறித்து பெண்களின் தனியுரிமை என்பது போல பேசியிருக்கும் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Did you take permission of the women before you placed those cctv s .?? Polling booth is not a dress changing room. We are not interested in your Convenient EXCUSES.. WE need TRANSPARENCY. #justasking#VoteChorihttps://t.co/QJQtRdEENE
— Prakash Raj (@prakashraaj) August 17, 2025
பிரகாஷ் ராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கு முன்பு நீங்கள் பெண்களிடம் அனுமதி பெற்றீர்களா? ஒரு வாக்குச் சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. நீங்கள் அளிக்கும் வசதியான சாக்குபோக்குகள் எங்களுக்குத் தேவையில்லை, எங்களுக்குத் தேவை வெளிப்படைத்தன்மை என்று பதிவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசி, ஏஎன்ஐ எக்ஸ் பக்கத்தில் வெளியான டிவீட்டை அவர் மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார்.
அதாவது, வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வைத்தக் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்த போது, பெண்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, சிசிடிவி காட்சிகளைப் பகிர முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியிருந்தார்.
இதற்குதான், சிசிடிவி கேமரா வைப்பதற்கு முன்பு பெண்களின் ஒப்புதல் பெறப்பட்டதா? என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஏற்கனவே, வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்திருப்பது மேலும் பேசுபொருளாகியிருக்கிறது.